முடக்கலில் அனுமதித்த தொழில்கள் காரணம்?


 இந்த முறை நாடு முடக்கப்பட்டுள்ளபோது ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் உல்லாசப் பயணத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. இந்த இரண்டு துறைகளும் எமது நாட்டுக்கு பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளாகும். நோய்த் தொற்றினால் மக்கள் மரணிக்கிறார்களோ, இல்லையோ இந்த துறைகளை தற்காலிகமாகவேனும் முடக்க நேர்ந்தால் அரசாங்கத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும். அதனால் அரசுக்கும் வேறு வழி இல்லை.


ஜனாதிபதி தனது விசேட உரையின்போது ஆடை ஏற்றுமதித் துறையானது நாட்டிற்கு ஆண்டொன்றிற்கு 5 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியையும், உல்லாசப் பயணத் துறை 4.5 பில்லியன் அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருவதாக தெரிவித்துள்ளார். அரசு உள்நாட்டில் ஏற்படும் செலவீனங்களை பணத்தினை அச்சிட்டு தற்காலிகமாக சமாளித்து வருகிறது. அதனால் ஏற்படும் பணவீக்கம் என்பது இரண்டாம் பட்சம். ஆனால் வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களில் இந்த முறை பயனற்றது. ஏனென்றால் அரசினால் டொலர்களை அச்சிட முடியாது. எனவே அரசு புதிதாக அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அத்துடன் தேவையற்ற அந்நியச் செலாவணியின் செலவுகளையும் தடுக்க வேண்டும். 


ஆடைகள் ஏற்றுமதிக்கு இலங்கைக்கு பெருமளவில் உறுதுணையாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள GSP Plus சலுகையாகும். 2020 ஆம் ஆண்டில் ஆடைகள் ஏற்றுமதியானது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 1,021 மில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகளுக்கு 2,329 மில்லியன் டொலர்களாகவும் இருந்தது. ஆனால் சீனாவிற்கான ஏற்றுமதியோ வெறும் 62 மில்லியன் டொலர்களே. எனவே மேற்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் மிகவும் குறைவானதே.


அது போன்று இலங்கையின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தை கருத்தில் கொண்டாலும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் 36% இனையும், ஐரோப்பிய யூனியன் 26% இனையும், இந்தியா 8.3% இனையும் வகிக்கின்றது. இங்கும் சீனாவுக்கான ஏற்றுமதி வெறும் 3.3% தான்.


2019 ஆம் ஆண்டு உல்லாசப் பயணிகளின் வருகையில் ஐரோப்பிய யூனியன் 50% இனையும், அமெரிக்கா 15% இனையும், ஆசிய பசிபிக் நாடுகள் 25% இனையும் கொண்டிருந்தன. சீனா ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளினுள் 8.8% இனையே கொண்டிருந்தது.


மேலும் இலங்கையின் கடன்களை எடுத்துக் கொண்டால், அவற்றின் மொத்தப் பெறுமதி ஏறக்குறைய 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக இருக்கும் நிலையில், இவற்றில் ஏறக்குறைய அரைவாசி சந்தையில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலமே பெறப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து 13% கடன்கள் பெறப்பட்டுள்ளன. யப்பான், சீனா நாடுகள் முறையே மொத்தக் கடன்களில் தலா 10% இனை வழங்கியுள்ளன. மிகுதியான கடன்களே உலக வங்கி, இந்தியா, மற்றும் ஏனைய இடங்களில் பெறப்பட்டுள்ளன.


இப்படி எந்த ஒரு அம்சத்தை எடுத்துக் கொண்டாலும், எமது நாடு அதிகம் நன்மைகளை மேற்கு நாடுகளின் மூலமே அடைந்து கொள்கிறது. ஆனால் இலங்கை மேற்குலகு சார்ந்து எப்போதும் தனது பொருளாதார கொள்கைகளை வகுப்பதில்லை. ஏனென்றால் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் உள்நாட்டில் கட்டியெழுப்பியுள்ள அரசியல் அவ்வாறானது. மேற்குலகை எதிராளியாகவும், சீனாவை நண்பனாகவும் காட்டி அரசியல் செய்யும் எந்தவொரு அரசியல்வாதியும் சீனாவில் தமது இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு முரண்பாடுதான். அவர்கள் எல்லோரும் மேற்கு நாடுகளிலேயே தங்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள்.


மேற்கு நாடுகளுடன் வர்த்தகத்தினை பேணிக் கொள்வது அப்படி ஒன்றும் இலகுவான காரியமுமல்ல. மேற்கு நாடுகள் வேறு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடும்பொழுது சில விடயங்களை எதிர்பார்க்கிறன. குறிப்பாக சட்ட ஆட்சி, மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் போன்ற அடிப்படை விடயங்களை அந்த நாடுகள் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதற்கு உதாரணமாக GSP Plus இனை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கும் தகைமைகளைக் குறிப்பிடலாம். இந்த நிபந்தனைகளை புறம் தள்ளி இலங்கையுடன் வர்த்தக உறவினை பேணுமாறு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு எமது நாட்டின் பேரம் பேசும் தகுதி இல்லை.


மேற்கு நாடுகளும் அவை சார்ந்த நிறுவனங்களும் கடன்களை வழங்குவதற்கும் சில அடிப்படை நியமங்களை விதித்திருக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்களை வழங்குவதற்கு நிபந்தனைகளை விதிப்பதும் அவற்றில் ஒன்றுதான்.


ஆனால் சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடன்கள், இலங்கை பெற்றுக் கொள்ளும் குறுங்காலக் கடன்களை விட நியாயமானவை. நீண்ட கால நோக்கில் நலன் தருபவை. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் இலங்கை அரசியல் இல்லை.


அரசியல் கொள்கைகளால் ஏற்படும் முரண்பாட்டால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களை இலங்கை சீனாவின் மூலம் அடைந்து கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் சீனா உதவிகளை, இலங்கையுடன் தனது வர்த்தகத்தினை அதிகரிப்பதன் மூலம் வழங்கவில்லை. மாறாக கடன்களை வழங்கியே அந்த இழப்புகளை இலங்கை தற்காலிகமாக சரிசெய்ய உதவுகிறது. உதாரணமாக GSP Plus இனை இலங்கை இழக்க நேர்ந்தால், அதனூடாக நடைபெறும் ஏற்றுமதிகளை இலங்கையால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலாது. ஆனால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை தற்காலிகமாக சீனாவின் கடனுதவியுடன் சமாளித்துக் கொள்ள இயலும். இது ஒருவர் தனது வியாபாரம் வீழ்ச்சியடையும் போது, கடன்கள் வாங்கி தனது செலவுகளை சமாளிப்பதற்கு ஒப்பானது. ஆனால் அவரால் தனது வியாபரத்தை அதிகரித்து அதன் வருமானத்தின் மூலம் கடன்களை செலுத்த முடியாமல் போனால், இறுதியில் அவர் முழுமையாக வியாபாரத்தையும் இழந்து தனது சொத்துக்களையும், வியாபாரத்தையும் எல்லாவற்றையும் விற்று கடன்களை செலுத்துவதுதான் அவருக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழியாக இருக்கும். 🤔🤔🤔


Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்