பிணைமுறி சிறு விளக்கம்.

பிணைமுறி என்றால் என்ன?

பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் வழிமுறையாகும். மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிக்க நிதி தேவைப்படுகின்றபோது, அரசு மத்திய வங்கியினூடாக பிணைமுறி ஏலம் வெளியிடப்படுகின்றது. அப்படியென்றால் நிரந்தர வைப்புச் சான்றிதழொன்று என நினைத்துக்கொள்க. அவற்றை சாதாரண மக்களைப் போன்றே வங்கிகளும் கொள்வனவு செய்யமுடியும். அதற்காக வட்டியும் வழங்கப்படுகின்றது. இதனால் பிணைமுறிகளை கொள்வனவு செய்வது மக்களைப் போன்றே, வங்கிகளுக்கும் முதலீட்டு உபாயமொன்றாகும்.

வங்கிகள் இந்த பிணைமுறிகளை கொள்வனவு செய்வதேன்? என நீங்கள் நினைக்கக்கூடும். வங்கிக் கிளைகளுக்கு கிடைக்கப்பெறும் வைப்புகளை கடன் கொடுத்தே அவர்கள் இலாபமீட்டுகின்றனர். அதேபோன்று, அவர்கள் இலாபமீட்டும் எதிர்பார்ப்பில் கடன் வழங்குகின்றனர். கடன் வழங்கியும் எஞ்சியிருக்கும் பணத் தொகையை கிடப்பில் வைக்காது அதனை பிணைமுறிகளில் முதலிடுகின்றனர். பிணைமுறிகளென்பது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கால எல்லையைக் கொண்டவைகள். திறைசேரி பில்கள் வருடமொன்றுக்கு குறைவான கால எல்லையைக் கொண்டதாகும். 

எக்ஸ் என்பவர் ஒரு இலட்சம் செலுத்தி பிணைமுறியொன்று கொள்வனவு செய்தார் எனக்கொள்வோம். காலம், ஒரு வருடம் எனின் ஒரு வருட முடிவுக்குள் கடனையும் வட்டியையும் திருப்பிக் கொடுப்பதற்கு மத்திய வங்கி சான்றிதழொன்று வழங்கும். அரசாங்கத்திற்கு பணம் வழங்கினால், அரசு பணம் அச்சிட்டாயினும் கடனை திருப்பிச் செலுத்துமென்ற நம்பிக்கை கடன் கொடுப்பவரிடம் இருக்கும். பிணைமுறியில் பணத்தை முதலீடு செய்வது சவாலற்ற முதலீட்டு வழி முறையாகும். இதனால், அதிகமானோர் பிணைமுறியில் முதலிடுகின்றனர்.

எக்ஸ் என்பவரிடம் ஒரு இலட்சம் பெறுமதியான பிணைமுறி சான்றிதழொன்று இருப்பதாக கொள்வோம். பிணைமுறிக்கு உள்ள கேள்வி மற்றும் வழங்கலுக்கேற்ப சந்தையில் பெறுமதி கூடவோ, குறையவோ முடியும். அதை நாம் இவ்வாறு நோக்குவோம். சாதாரண தேங்காயொன்று 50 ரூபாய்கள். அசாதாரண தேங்காயொன்றின் விலை 60 அல்லது 70 ரூபாய்களாக இருக்கலாம். அதேபோன்று, 30 அல்லது 40 ரூபாய்களாகவும் இருக்கலாம்.

மத்திய வங்கி பிணைமுறிகளை விற்பதையே ஏலத்தில் மேற்கொள்கின்றது. அது 100 வீதம் சுதந்திரமான ஏல விற்பனையாகும். அவற்றில் மத்திய வங்கி ஆளுநருக்கு கலந்துகொள்ள முடியாது. காரணம், எக்காலத்திலுமே மத்திய வங்கி ஆளுநர் என்பது அரசியல் நியமனமாகும். ஏலத்தை வழிநடத்துவது பிரதி ஆளுநர் ஒருவராகும். இது தவறின் நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்பதால் பாதுகாப்பாகவே முன்னெடுக்கப்படுகின்றன. யாருக்கும் இவற்றில் விரல் நுழைக்க முடியாது.

இப்போதுதான் கதையின் சுவாரஷ்யமான பகுதி வருகின்றது. அர்ஜுன் மஹேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார். அவர் சிங்கப்பூர் பிரஜையொருவர். ஒரு நாட்டின் பணத்தாள்களில் கையொப்பமிடுவதும் நிதியமைச்சரும் ஆளுநருமேயாகும். இலங்கையின் பணத் தாள்களில் சிங்கப்பூர் பிரஜையொருவரே கையொப்பமிட்டுள்ளார். அப்பதவிக்கு பொருத்தமான இலங்கையர் ஒருவர் இருக்கவில்லையா? அது பெரும் பிரச்சினையாகும்.

மத்திய வங்கியின் ஆளுநர் ஒருவரின் குடும்பத்தவர்களுக்கு பிணைமுறி கொடுக்கல் வாங்கல் களுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை நடத்திச்செல்ல அனுமதியில்லை. எனினும், அர்ஜுன் மஹேந்திரனின் மகளைத் திருமணம் செய்த அர்ஜுன் அலோசியஸ் அவ்வாறானதொரு நிறுவனத்தை நடத்திச் சென்றார். அதுவே பெர்பெஷுவல் ட்ரெஷரீஸ். இங்கிருந்தே பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

பிணைமுறி ஏலமென்பது சிக்கல்கள் நிறைந்த கதையாகும். அதனால் இந்த கதையை விற்பனை நிலையமொன்றாக ஒப்பிட்டு பார்ப்போம்.

அர்ஜுன் மஹேந்திரன் என்பவர் மத்திய வங்கி எனும் விற்பனை நிலையத்தின் தலைவராவார். விற்பனை நிலையத்தில் பிணைமுறி எனும் தேங்காய் விற்பனை நடைபெறுகின்றது எனக் கொள்வோம். அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் தேங்காய் வியாபாரி. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போன்று, தேங்காய்களின் விலை காலத்திற்கு காலம் கூடிக் குறையும். 

இந்த பிணைமுறி எனப்படும் தேங்காய்களின் விலை 100 ரூபாய்களாக இருந்து, 120 ரூபாய்கள் வரை விலை அதிகரித்த காலம் எனக் கொள்வோம். விற்பனை நிலையத்திற்கு நல்லவை எண்ணும் தலைவராயின் தேங்காய்களை 120 ரூபாய்களுக்கு விற்று இலாபமீட்டுவார். எனினும் அர்ஜுன் மஹேந்திரன் பிணைமுறி ஏலம் எனப்படும் தேங்காய் ஏலத்தில் 120 பெறுமதியான தேங்காயை தனது மருமகனுக்கு 80 ரூபாய்களுக்கு வழங்கும்படி பிரதி ஆளுநரை காட்டாயப்படுத்துகிறார். ஏலம் நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதியற்ற நிலையிலும், அங்கு சென்று காட்டாயப்படுத்தி, 120 பெறுமதியான தேங்காயை 80க்கு விற்பனை செய்கிறார். இதுபோன்று மில்லியன் கணக்கான தேங்காய்களை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் இருந்து மருமகனுக்கு விற்பனை செய்கிறார். அவற்றை அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் 120 ரூபாய்களுக்கு விற்பனை செய்கின்றார். தேங்காயொன்றுக்கு 40 ரூபாய்கள் வரை இலாபமீட்டுகின்றார். மில்லியன் கணக்கான தேங்காய்கள் என்பதால் மருமகனின் இலாபம் பில்லியன் கணக்காகும் என்பதை நான் கூறித் தெரியவேண்டியதில்லை. இந்த இலாபமானது 4000 ஊழியர்களையும், 200 கிளைகளையும் கொண்ட கொமேர்ஷல் வங்கியின் மொத்த வருமானத்தையும் விடவும் அதிகமானதாகும். அவ்வளவு இலாபத்தையும் பெற்ற மருமகனின் நிறுவனம் 20க்கு 20 கட்டிடமொன்றையும் 20க்கு குறைந்த ஊழியர்களுடன் ஒரு கிளையையும் கொண்டதாகும்.
நீங்கள் தலைவராக இருக்கும் விற்பனை நிலையத்திலிருந்து 120 ரூபாய்கள் பெறுமதியான தேங்காயை உங்கள் உறவினறொருவருக்கு 80 ரூபாய்களுக்கு விற்பனை செய்தால், விற்பனை நிலையம் நட்டத்தை எதிர் கொள்ளுமா? இல்லையா? இப்போது நீங்கள் இலாபமீட்ட வேண்டுமெனின் அதற்கான மாற்று வழியென்ன? உங்களது விற்பனை நிலையத்தில் மீன் டின் ஒன்றை 150 ரூபாய்களுக்கு விற்பனை செய்தால், அதனை 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்தே, தேங்காய் விற்பனையில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்யலாம். அதேபோன்று, விற்பனை நிலையத்திற்கு மீன் டின் வழங்குபவரிடம் 130க்கு பெற்ற மீன் டின்னை இப்போது 110 ரூபாய்களுக்கு பெற்று, 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்தே தேங்காயில் இழந்த நட்டத்தை ஈடுசெய்யலாம்.
விற்பனை நிலையத்திற்கு மீன் டின் வழங்குபவரைப் போன்றே, பிணைமுறிகளுக்கு பணம் முதலிடுபவர்கள். மக்களும், வங்கிகளும் மேலதிக பணத்தை பிணைமுறியில் வைப்பிலிடுகின்றனர். அதற்காக திருப்பிச் செலுத்தும் தொகை குறைவடைகின்றது. 130ரூபாய்களின் மீன் டின்னுக்கு 110 வழங்குவது போன்று. அதேபோன்று, மத்திய வங்கியில் இருந்து ஏனைய வங்கிகளுக்கு கடன் வழங்கும்போது, திருப்பிப் பெறும் வட்டி வீதத்தை அதிகரித்தல். அது, 150 ரூபாய்கள் பெறுமதியான மீன் டின் ஒன்றை 200 ரூபாய்களுக்கு விற்பதைப் போன்று. நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வங்கிகளுக்கு மத்திய வங்கி அதிக வட்டித் தொகைக்கு கடன் வழங்குகின்றது. அதிக வட்டித் தொகையை கொடுத்து கடன் பெறும் வங்கிகள், மக்களுக்கு அதிக வட்டிக்கு கடன் வழங்குகின்றது.
மத்திய வங்கியில் நடைபெற்ற ஊழலால், சாதாரண மக்கள் வங்கிகளில் பெறும் கடன்களுக்கான வட்டித் தொகையும் அதிகரித்துள்ளன. 150 ரூபாய்களின் மீன் டின்களை 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்வதைப் போன்று. பொது மக்கள் வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டால் வழங்கப்படுகின்ற வட்டித் தொகையும் குறைவடைந்துள்ளது. அது, விற்பனை நிலையத்திற்கு 130 ரூபாய்களுக்கு மீன் டின் வழங்கியவருக்கு 110 ரூபாய்கள் கொடுப்பது போன்றாகும்.

இப்போது, விற்பனை நிலையத்திற்கு மீன் டின்களை வழங்கிய வியாபாரி நட்டமடைந்துள்ளார். ஏன்? 130 ரூபாய்களுக்கு விற்பனை செய்த மீனுக்கு, கிடைப்பது 110 ரூபாய்களே. இன்று அதுபோன்ற நிலைமையே ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மத்திய வங்கி வழங்கவேண்டிய தொகையைவிட குறைவாகவே வழங்குகின்றது. நாட்டின் மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய வட்டி வீதம் குறைவாகவே வழங்கப்படுகின்றது. சிங்கப்பூர் பிரஜையொருவரின் மருமகன் இலாபமடைய முழு நாட்டு ஊழியர்களினதும் வட்டி வீதம் குறைவடைந்துள்ளது. அந்த நட்டத்தை சரிசெய்ய வங்கிகளில் கடன் பெற்றவர்களின் வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலகுவாக கூறுவதென்றால், அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் பெற்ற இலாபத்தால் நட்டமடைந்த மத்திய வங்கியின் கணக்குகளை சீர்செய்ய பொதுமக்கள் முதுகுகளில் சுமையேற்றப்படுகின்றது. மத்திய வங்கி அடைந்த நட்டத்தை சீர்செய்ய இன்னும் 7 அல்லது 8 வருடங்கள் செல்லவேண்டியிருக்கின்றது.

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்